3 டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலெக்டரிடம் மனு


3 டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலெக்டரிடம் மனு
x

3 டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

திருச்சி

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் செழியன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி உறையூர் கடைவீதி மிகவும் நெரிசலான பகுதியாகும். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வழியாக சென்று வருகிறார்கள். மாணவ-மாணவிகள் காலை, மாலை வேளைகளில் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். கடந்த ஆண்டு இந்த பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை மட்டும் இருந்தது. தற்போது மேலும் 2 கடைகள் திறக்கப்பட்டதால் குடிகாரர்களால் தினமும் மக்கள் அவதிப்படுகிறார்கள். டாஸ்மாக் கடைகளின் முன்பு வாகனத்தை அங்குமிங்கும் நிறுத்துவதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். 3 கடைகளிலும் ஏராளமானோர் மது குடிக்க கூடுவதால் உறையூர் கடைவீதி குடிகாரர்களின் சந்தையாக மாறிவிட்டது. கடந்த வாரம் அங்கு மதுபோதையில் நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஆகவே அங்குள்ள 3 டாஸ்மாக் கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும். இதேபோல் குண்டும், குழியுமாக உள்ள உறையூர் கடைவீதி சாலையையும் விரைந்து சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர். மேலும் போலீஸ் கமிஷனர், டாஸ்மாக் மேலாளர், மாநகராட்சி ஆணையர் ஆகிய அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.


Next Story