பழுதடைந்த சுகாதார வளாகத்தை இடிக்க மக்கள் எதிர்ப்பு


வேலாயுதம்பாளையம் அருகே பழுதடைந்த சுகாதார வளாகத்தை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதனை சீரமைத்து தர அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

ஆதிதிராவிடர் காலனி

வேலாயுதம்பாளையம் அருகே உள்ள கந்தம்பாளையம் பகுதியில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 250-க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கென்று பொது சுகாதார வளாகம் எதுவும் இல்லை. இயற்கை உபாதைகள் கழிக்க திறந்தவெளியை பயன்படுத்தி வந்தனர். இதனால் அப்பகுதி பெண்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.

இவர்கள் காலனியிலிருந்து 20 அடி தூரத்தில் உள்ள புகழிநகர் ஒதுக்குப்புறத்தில் காலனிக்கு சொந்தமான 5 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தில் பொது சுகாதார வளாக கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று புன்செய் புகழூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு காலனி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

சுகாதார வளாகம்

இதையடுத்து, கடந்த 2012-2013-ம் ஆண்டில் ரூ.14½ லட்சம் செலவில் அப்பகுதியில் புதிதாக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிவறைகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கழிவறையும், துணிகளை துவைப்பதற்கான வசதிகள், தண்ணீரை தேக்கி வைப்பதற்கான நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் போதிய பராமரிப்பு இன்றி விடப்பட்டதால் அந்த சுகாதார வளாகம் தற்போது சிதிலம் அடைந்து உள்ளது. குறிப்பாக கழிவறை கதவுகள் உடைந்தும், கழிவறைகளின் மேற்கூரைகள் உடைந்தும், பல்வேறு இடங்களில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.

இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் இந்த சுகாதார வளாகத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தருவதாக கூறினர். ஆனால் அப்பகுதி மக்கள் இந்த சுகாதார வளாகத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்றும், இதன் அருகிலேயே காலனிக்கு சொந்தமான இடத்தில் புதிதாக சுகாதார வளாகம் கட்டி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

சுகாதார வளாகத்தை இடிக்க எதிர்ப்பு

ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த முருகன்:- காலனி மக்களுக்காக இப்பகுதியில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் இங்கு பலதரப்பட்ட மக்களும் இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனை யாரும் தடுப்பது இல்லை. இங்குள்ள கழிவறை கதவுகள் சேதம் அடைந்து உள்ளன. மேலும் கட்டிடத்தின் பல்வேறு இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. சில இடங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனை சீரமைத்து தருமாறு நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். அவர்கள் இதனை பார்வையிட்டு இந்த சுகாதார வளாகத்தை இடிக்க வந்தார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் அதிகாரிகளிடம் இந்த சுகாதார வளாகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தோம். மேலும் இதன் அருகே உள்ள காலனிக்கு சொந்தமான இடத்தில் சுகாதார வளாகத்தை கட்டி கொடுத்துவிட்டு அதன்பிறகு இந்த சுகாதார வளாகத்தை இடிக்கலாம் என்று தெரிவித்தோம்.

அசுத்தம் நிறைந்த இடம்

குணசேகரன்:-

கந்தம்பாளையம் பகுதியில் ரூ.14½ லட்சம் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாக கட்டிடம் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. இதனால் அந்த சுகாதார வளாகம் அசுத்தம் நிறைந்த இடமாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் இருக்கும் போது நல்ல முறையில் பராமரிக்கப்பட்டது. ஆனால் இப்போது சரிவர பராமரிக்கப்படவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், இந்த சுகாதார வளாகத்தை இடித்து விட்டு புதிதாக கட்டி தருவதாக கூறுகிறார்கள்.

ஹைஸ்கூல்மேடு பகுதியில் உள்ள கழிப்பிடத்தை இதேபோன்று கூறிஇடித்தார்கள். ஆனால் அப்பகுதியில் சுகாதார வளாகம் கட்டும் பணி பாதியிலேயே நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கழிப்பிட வசதியில்லாமல் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அது போன்ற நிலை எங்களுக்கு வர வேண்டாம். இந்த சுகாதார வளாகத்தை இடிக்காமல் அதனை புதுப்பித்து தர வேண்டும். மேலும் காலனிக்கு சொந்தமான இடத்தில் புதிய சுகாதார வளாகம் கட்டி கொடுத்த பிறகு இதனை இடித்து கொள்ளலாம்.

தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்

செல்லக்கண்ணு:- இந்த சுகாதார வளாகம் கட்டுவதற்கு முன்பு இப்பகுதியெல்லாம் காட்டுப்பகுதியாக இருந்தது. இதனால் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தோம். தற்போது இங்கு காடுகள் எல்லாம் கட்டிடமாக மாறிவிட்டது. மேலும் இங்குள்ள வீடுகளில் கழிவறை வசதி இல்லை. தற்போது இந்த சுகாதார வளாகத்தையும் இடித்து விட்டால் நாங்கள் கழிவறைக்கு எங்கு செல்வோம். எனவே நகராட்சி அதிகாரிகள் இந்த சுகாதார வளாகத்தை இடிக்காமல் அதனை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க ேவண்டும். மேலும் இங்கு தடுப்பு சுவர் இல்லாததால் மர்ம ஆசாமிகள் இரவு நேரங்களில் மது குடித்துவிட்டு மதுபாட்டில்களை போட்டு உடைத்து விட்டு செல்கிறார்கள். எனவே இந்த சுகாதார வளாகத்திற்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

மின் விளக்குகள்

ராஜம்மாள்- ஆதிதிராவிடர் காலனி பெண்களுக்காக சுகாதார வளாகத்தை அதிகாரிகள் கட்டிகொடுத்தார்கள். இப்போது இதை இடித்துவிட்டால் கழிவறைக்கு நாங்கள் எங்கே செல்வோம். இங்கு தண்ணீர் தடையின்றி வருவதால் துணிகளை துவைப்பது, குளிப்பதற்கும் எங்களுக்கு வசதியாக இருக்கிறது. பழுதடைந்த கட்டிடத்தை சீரமைப்பதுடன், கழிவறை கதவுகளை புதிதாக அமைக்க வேண்டும். தற்போது மின் விளக்குகள் சரவர எரியாததால் இரவு நேரங்களில் செல்லும் பெண்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள். எனவே இந்த சுகாதார வளாகத்தை இடிக்காமல் இதனை புனரமைத்தாலே எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story