பால் வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
களக்காட்டில் பால் வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
களக்காடு:
களக்காட்டில் உள்ள கிருஷ்ணா பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகளிடம் நேரடியாக பால் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் தினமும் மீதமுள்ள சுமார் 6 ஆயிரம் லிட்டர் பாலை நெல்லை ஆவின் நிறுவனத்துக்கும் வழங்கினர்.
இந்த நிலையில் பால் உற்பத்தி குறைந்ததால், பொதுமக்களுக்கு குறைவான அளவே பால் வினியோகம் செய்து வருகின்றனர். எனினும் நெல்லை ஆவினுக்கு அதிகளவு பால் வழங்க அதிகாரிகள் நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் களக்காடு பகுதி மக்களுக்கு போதியளவு பால் வினியோகம் செய்த பின்னரே மீதமுள்ள பாலை நெல்லை ஆவினுக்கு வழங்க வேண்டும் என்று கூறி, நேற்று இரவில் களக்காட்டில் பால் கேன் ஏற்ற வந்த லோடு ஆட்டோவை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது களக்காடு பகுதி மக்களுக்கு போதியளவு வழங்கிய பின்னரே நெல்லை ஆவினுக்கு பால் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.