மிளகு விலை தொடர்ந்து உயர்வு


மிளகு விலை தொடர்ந்து உயர்வு
x
தினத்தந்தி 15 Sep 2023 6:45 PM GMT (Updated: 15 Sep 2023 6:46 PM GMT)

குமரி மாவட்டத்தில் மிளகு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் மிளகு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மருத்துவ குணம்

மணமூட்டும் பயிர்களில் மிளகு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இது குமரி மாவட்டத்தில் குறுமிளகு, நல்ல மிளகு என்ற அழைக்கப்படுகிறது. கருப்புத் தங்கம் என வர்ணிக்கப்படும் மிளகு தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவைத் தாய் நிலமாக கொண்டதாகும். தற்போது கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் அதிக அளவில் மிளகு சாகுபடியாகிறது.

'பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் தங்கலாம்' என்ற முதுமொழியால் இதன் மருத்துவக் குணத்தை அறிந்து கொள்ளலாம். மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பனச்சமூடு, களியல், குலசேகரம், சுருளகோடு, பாலமோர், மாறாமலை, தடிக்காரன்கோணம், வேளிமலை, கரும்பாறை, முக்கடல், ஆறுகாணி, பத்துகாணி, ஒருநூறாம்வயல், மோதிரமலை, தோட்டமலை, தச்சமலை, முகளியடிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 1000 எக்டர் வரை மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக பழங்குடி மக்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளில் மிளகு சாகுபடி செய்து கணிசமான அளவு வருவாய் பெறுகின்றனர். மலைப் பகுதிகளில் கரிமுண்டன் வகை மிளகும், சமவெளிப் பகுதிகளில் பண்ணியூர் வகை மிளகும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

விலை உயர்வு

மிளகு பயிருக்கு நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை சீசன் காலம் ஆகும். இந்த காலங்களில் மிளகு அறுவடை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதி மற்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் சுத்தப்படுத்தப்பட்ட உலர்ந்த மிளகு கிலோ ரூ.510 வரை விற்பனையானது. தற்போது சீசன் நிறைவடைந்த நிலையில் மிளகின் விலை அதிகரித்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி சுத்தப்படுத்தப்பட்ட உலர்ந்த மிளகு கிலோ ரூ.655-க்கு விற்கப்பட்டது. சுத்தப்படுத்தப்படாத உலர்ந்த மிளகு கிலோ ரூ.635, புதிய மிளகு கிலோ ரூ.625 என விற்பனையானது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்த விலையோடு ஒப்பிடும் போது கிலோவுக்கு ரூ.145 வரை அதிகரித்துள்ளது. இதனால் மிளகு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வரத்து குறைவு

இதுகுறித்து குலசேகரத்தை சேர்ந்த மிளகு விவசாயி ஒருவர் கூறுகையில், 'கடந்த சீசன் காலத்தில் மிளகின் விலை சராசரியாக கிலோ ரூ.510 வரை இருந்தது. தற்போது சீசன் நிறைவடைந்த நிலையில் மிளகின் வரத்து குறைந்ததால் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இது மகிழ்ச்சியளிக்கிறது. வருகிற சீசன் காலத்திலும் இந்த விலை தொடர்ந்தால் நன்றாக இருக்கும்' என்றார்.


Next Story