பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தமிழ்ச்செல்வனுக்கு உற்சாக வரவேற்பு
புதிதாக நியமனம் செய்யப்பட்ட பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தமிழ்ச்செல்வனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. இளம்பை இரா.தமிழ்ச்செல்வனை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து சென்னையில் இருந்து நேற்று காலை கார் மூலம் பெரம்பலூருக்கு வந்த பெரம்பலூர் மாவட்ட புதிய அ.தி.மு.க. செயலாளர் தமிழ்ச்செல்வனுக்கு மாவட்ட எல்லையான திருமாந்துறை சுங்கச்சாவடியில் கட்சியினர் மேள, தாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் தமிழ்ச்செல்வன் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் வருகை புரிந்து அங்கு அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா, பெரியார் ஆகியோர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவரை வாழ்த்தி கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அவர் சங்குபேட்டையில் கட்சி கொடியை ஏற்றி வைத்து, பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழ்ச்செல்வன் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக கட்சியினர் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளருமான வரகூர் அருணாச்சலம், வர்த்தக அணி மாவட்ட செயலாளரும், முன்னாள் குன்னம் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான ஏ.கே.ராஜேந்திரன், பேரளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துரைக்கண்ணு, ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம், புஜங்கராயநல்லூரை சேர்ந்த செந்தில்குமார், நல்லறிக்கையை சேர்ந்த சின்னத்துரை மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர், நகர, கிளை நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.