பெரம்பலூரில் பல்நோக்கு தலைமை கால்நடை மருத்துவமனை இல்லை


பெரம்பலூரில் பல்நோக்கு தலைமை கால்நடை மருத்துவமனை இல்லை
x

தமிழகத்தில் பால் உற்பத்தியில் 2-ம் இடம் வகிக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்நோக்கு தலைமை கால்நடை மருத்துவமனை இல்லை என விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பெரம்பலூர்

பால் உற்பத்தியில் 2-ம் இடம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். தமிழகத்திலேயே சிறிய மாவட்டமாக பெரம்பலூர் இருந்தாலும் பால் உற்பத்தியில் மாநில அளவில் 2-வது இடத்தில் உள்ளது. பால் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு கால்நடை வளர்ப்போர்கள் தங்களது குடும்பத்தை நடத்தி வருகின்றனர். கால்நடைகளுக்கு ஏற்படும் சிறிதளவு உடல்நலக்குறைவுக்கு மருந்துகள் வாங்க மாவட்டத்தில் 37 கால்நடை மருந்தகங்கள் உள்ளன.

24 மணி நேரமும் செயல்படக்கூடிய...

அங்கு கால்நடை மருத்துவர்கள் கால்நடைகளுக்கு செயற்கை முறையில் இனப்பெருக்கம், தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மற்றும் சிறு அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். அந்த மருந்தகம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை மட்டும் செயல்படுகிறது. ஆனால் கால்நடைகளுக்கு நுரையீரல் பிரச்சினை, எலும்பு அமைப்பு, பெரிய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரம் செயல்படக்கூடிய பல்நோக்கு தலைமை கால்நடை மருத்துவமனை மற்றும் நடமாடும் கால்நடை மருத்துவமனை ஆகியவை பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்று கூட இல்லை என விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

பல்நோக்கு தலைமை கால்நடை மருத்துவமனை

இதுகுறித்து குன்னம் தாலுகா, கே.புதூரை சேர்ந்த விவசாயி கலைராஜா கூறுகையில், கால்நடைகளுக்கு ஏற்படும் உடல்நலக்குறைவுக்கு ஸ்கேனிங், அல்ட்ரா சவுண்ட், அறுவை சிகிச்சை அரங்கம், எக்ஸ்ரே போன்ற இதர தேவைகளுக்காக நாமக்கல் போன்ற மாவட்டங்களில் உள்ள பல்நோக்கு சிறப்பு கால்நடை மருத்துவமனைக்கு விவசாயிகள் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போதிய கால்நடை ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், மக்கள் தங்கள் கால்நடைகளை பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கு அதிக செலவு ஏற்படுகிறது. இதனால், கால்நடை வளர்ப்போர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு தலைமை கால்நடை மருத்துவமனையும், நடமாடும் கால்நடை மருத்துவமனையும் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய கால்நடை ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்த வேண்டும். கால்நடைகளுக்கான மருத்துவ காப்பீடு அனைத்து கால்நடைகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் கொள்முதல் விலையும் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

1 More update

Next Story