பெரம்பலூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


பெரம்பலூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பெரம்பலூர் நகராட்சி கிளை ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்க தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் குணசேகரன், பொருளாளர் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கநாதன், செயலாளர் அகஸ்டின் ஆகியோர் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை விளக்க பேசினர்.

நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள் மொத்தம் 231 பேரில், 90 பெண்கள் உள்பட 140 பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய காத்திருப்பு போராட்டம் இரவு வரை நீடித்தது. மதியம் அவர்கள் போராட்ட களத்திலேயே கலவை சாதம் சமைத்து சாப்பிட்டனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று அதிகாலை முதல் பணிகளை புறக்கணித்ததால் நகர் பகுதியில் ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் இருந்தது. பின்னர் நகராட்சி நிர்வாகம் நிரந்தர தூய்மை பணியாளர்கள், வெளியூரை சேர்ந்த தூய்மை பணியாளர்களை வைத்து குப்பைகளை அள்ளினர். ஒப்பந்த ஊழியர்களும் பணிகளை புறக்கணித்ததால் சில பணிகள் பாதிக்கப்பட்டன.


Next Story