தேசிய அளவிலான கேரம் விளையாட்டில் பெரம்பலூர் மாணவர் 3-வது இடம் பிடித்து சாதனை


தேசிய அளவிலான கேரம் விளையாட்டில் பெரம்பலூர் மாணவர் 3-வது இடம் பிடித்து சாதனை
x

தேசிய அளவிலான கேரம் விளையாட்டில் பெரம்பலூர் மாணவர் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அண்ணா நகர் கோவில்பாளையத்தை சேர்ந்த சின்னையன்-தனம் தம்பதியர் மகன் மணிகண்டன் (வயது 18). இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ. பொருளாதாரம் படித்து வருகிறார். மணிகண்டன் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த போது கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு 2 கோப்பைகளை பெற்றுத்தந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான கேரம் விளையாட்டு போட்டியில் 2-வது இடம் பிடித்தார்.

இந்தநிலையில், தேசிய அளவிலான கேரம் விளையாட்டு போட்டி டெல்லியில் உள்ள மதுராவில் கடந்த 5-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இதில், தமிழக அணிக்காக 19 வயது வரையிலான இரட்டையர் பிரிவில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் கலந்து கொண்டு விளையாடினார். அதில் மணிகண்டன் தேசிய அளவில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். அதனை தொடர்ந்து உலக அளவிலான கேரம் விளையாட்டு போட்டி மலேசியா நாட்டில் நடைபெற உள்ளது. அதில் மணிகண்டன் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு விளையாட உள்ளார். வெற்றி பெற்ற மணிகண்டனை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சென்னை மாநிலக்கல்லூரி முதல்வர் ராமன், பெரம்பூர் உலக கேரம் சாம்பியன் ஷிப் பயிற்சியாளர் சக்திவேல் ஆகியோர் பாராட்டினர்.

1 More update

Next Story