பெரியகுளம் பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேலம் அ.தி.மு.க. நிர்வாகிகள் திடீர் சந்திப்பு


பெரியகுளம் பண்ணை வீட்டில்  ஓ.பன்னீர்செல்வத்துடன் சேலம் அ.தி.மு.க. நிர்வாகிகள் திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 4 Aug 2022 1:58 PM GMT (Updated: 4 Aug 2022 5:11 PM GMT)

பெரியகுளம் பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை சேலம் அ.தி.மு.க. நிர்வாகிகள் திடீரென சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

தேனி

ஆலோசனை

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் பொதுக்குழு நடத்தப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடு்க்கப்பட்டார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன்கள் மற்றும் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடையேயான மோதல் வெடித்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். மேலும் கட்சியை கைப்பற்றுவதற்காக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட நிர்வாகிகளை தன்வசம் இழுப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

பண்ணை வீடு

இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம், கொரோனா பாதிக்கப்பட்டு குணமான பிறகு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து வருகிறார். அவரை தினந்தோறும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பாலகிருஷ்ணன், நாமக்கல் ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் நேற்று இரவு தேனிக்கு வந்தனர். பின்னர் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீ்ட்டிற்கு அவர்கள் சென்றனர்.

சந்திப்பு

அங்கு அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்து சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னா் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில்,

இன்னும் சில நாட்களில் ஏராளமான நிர்வாகிகளுடன் வந்து மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவிப்போம் என்றனர்.

எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மற்றும் நாமக்கல்லை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story