பெரியார், அண்ணா பிறந்தநாளையொட்டிகல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி:25-ந்தேதி நடக்கிறது


பெரியார், அண்ணா பிறந்தநாளையொட்டிகல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி:25-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெரியார், அண்ணா பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி வருகிற 25-ந்தேதி நடைபெறுகிறது என்று தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பிறந்தநாளையொட்டி தேனி மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் ஆண்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வருகிற 25-ந்தேதி நடக்கின்றன. அன்றைய தினம் காலை 10 மணியளவில், அண்ணா பிறந்தநாளையொட்டி, 'அண்ணாவும் மேடைப் பேச்சும்', 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு', 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு', 'வாய்மையே வெல்லும்', 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்' ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடக்கிறது.

அன்றைய தினம் பகல் 2 மணிக்கு பெரியார் பிறந்தநாளையொட்டி, 'பெரியாரும் பெண் விடுதலையும்', 'சுயமரியாதை இயக்கம்', 'தெற்காசியாவின் சாக்ரடீஸ்'. 'தன்மானப் பேரொளி', 'தந்தை பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகள்' ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடக்கிறது. பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை, ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்த கல்லூரி முதல்வர் மூலம் தெரிவு செய்து போட்டிக்குரிய பரிந்துரை படிவத்துடன் போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம். 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் என்ற வகையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story