உயர்நீதிமன்ற உத்தரவின்படிநிரந்தர தன்மையுடைய பணி நியமன ஆணை வழங்க வேண்டும்செவிலியர்கள் கோரிக்கை

உயர்நீதிமன்ற உத்தரவின்படி நிரந்தர தன்மையுடைய பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொரோனா பேரிடர் பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்டு அதன் பிறகு பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கொரோனா பெருந்தொற்று காலத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் 300 மருத்துவர்கள் தற்காலிக முறையில் பணியமர்த்தப்பட்டோம். இதில் 3 ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக பணியில் இருந்து நிரந்தர தன்மையுடைய செவிலியர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டனர். அதுபோல் 300 தற்காலிக மருத்துவர்களும் நிரந்தர மருத்துவராக பணி மாற்றம் செய்யப்பட்டனர். மீதமுள்ள 3,290 தற்காலிக செவிலியர்களுக்கு அவ்வப்போது காலிப்பணியிடம் சுமார் 3,300 இருப்பதால் நிரந்தரத் தன்மையுடைய செவிலியராக மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தோம். இதனை நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்தது. ஆனால் கடந்த 31.12.2022 அன்று இரவு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அரசு, எங்களை பணி நீக்கம் செய்தது.
இதனால் நாங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய தேர்வு நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது என்றுகூறி வழக்கு தொடுத்த செவிலியர்களுக்கு 6 வாரத்தில் பணி நியமனம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றாதது மிகவும் வேதனையளிக்கிறது. இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக முதல்-அமைச்சர் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நிரந்தர தன்மையுடைய செவிலியர் பணி ஆணை வழங்கவும் உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றவும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.






