பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி பெற வேண்டும்
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி பெற வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் நபர்கள், அமைப்புகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆகியோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2 வாரங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் முன் அனுமதி பெற்று சிலை வைக்க வேண்டும். அதன்படி தாங்கள் சிலை வைக்கும் இடம், சிலை வைக்கும் நாள், சிலை கரைக்கும் இடம் மற்றும் தேதி, ஊர்வலம் செல்லும் பாதை, சிலை பாதுகாப்பிற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் ஆகியவை குறித்து போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவித்து, முறையான முன் அனுமதி பெற்ற பிறகே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும். இது தொடர்பாக போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படும் கூட்டங்களிலும் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் அனுமதி இல்லாமல் சிலைகள் வைத்தல் கூடாது என்று பெரம்பலூர் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.