விவசாய பயன்பாட்டிற்காக ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி
விவசாய பயன்பாட்டிற்காக ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வண்டல் மண்
கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு புறம்போக்கு நீர் நிலைகளில் படிந்துள்ள மண், வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்து செல்ல ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 122-ம், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 17-ம் என மொத்தம் 139 நீர் நிலைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மழை பருவத்திற்கு முன்பு இக்குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டு அதில் உள்ள வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கிட அனுமதி அளிக்கப்படும்.
நீர்நிலைகளை தூர்வாரி, அதிலுள்ள வண்டல் மண்ணை விவசாய நிலத்திற்கு பயன்படுத்துவதால் நீர்நிலைகளில் மழைநீர் சேமிப்புத்திறன் பாதுகாக்கப்படுகிறது. நிலச்சீரழிவு குறைகிறது. நிலத்தடி நீர் மேம்பாடு அதிகமாகிறது. மண்வளம் மேம்படுகிறது. பயிர் உற்பத்தி திறன் மற்றும் பயிரின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது.
நில உரிமைச்சான்று
மனுதாரரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் மண், வண்டல் மண் தூர்வாரி எடுத்து செல்லப்பட வேண்டிய கண்மாய், ஏரி, குளம் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் கிராமம் அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும். விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண்ணை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் விவசாய நிலம் வைத்துள்ளார் அல்லது கிராம அடங்கல் பதிவேட்டின்படி குத்தகை பெற்று விவசாயம் செய்து வருகிறார் என்பதற்கும் அவருடைய நிலத்தின் வகைப்பாடு (நஞ்சை / புஞ்சை) குறித்தும், விவசாய நிலத்தின் விஸ்தீரணம் குறித்தும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று அதற்கான விண்ணப்பங்களை தாசில்தார் அலுவலகத்தில் பெற்று கிராம நிர்வாக அலுவலரிடம் நில உரிமைச்சான்று பெற்று திரும்ப தாசில்தார் அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வறண்ட நஞ்சை நிலம் என்றால் ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டரும் (25 யூனிட்), புஞ்சை நிலமாக இருந்தால் 90 கன மீட்டருக்கு (30 யூனிட்) மிகாமல் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் விவரம் தெரிந்துகொள்ள அருகே உள்ள தாசில்தார் அலுவலகம் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.