மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்
மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் கை, கால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குறைபாடுடையோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகள் அனைவரும் கட்டாயமாக தங்களது ஆதார் எண், தேசிய அடையாள அட்டை எண், யூ.டி.ஐ.டி. எண், தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் பதிவேற்றம் செய்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே இதுநாள் வரையில் பயனாளி உயிருடன் உள்ளார் என கிராம நிர்வாக அலுவலரிடம் வாழ்நாள் சான்று, ஆதார் அட்டை நகல், யூ.டி.ஐ.டி. பதிவு எண் ஒப்படைக்காத மாற்றுத்திறனாளிகள் வருகிற 3-ந் தேதிக்குள் பயனாளியின் ஆதார் அட்டை நகல், யூ.டி.ஐ.டி. அட்டை நகல், வங்கி சேமிப்பு புத்தக நகல் பெற்று, மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர், பாதுகாவலர்கள், புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.