மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் மனு
மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட மக்களை தேடி மருத்துவ திட்ட பெண் சுகாதார தன்னார்வலர்கள் திரளாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பெண் சுகாதார தன்னார்வலர்களாக கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரை சுமார் 3 ½ ஆண்டுகாலமாக ஒப்பந்த அடிப்படையில் உயர் ரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை பார்க்கும் வேலை செய்து வருகிறோம். இதற்கான பணி செய்ய ஊக்கத்தொகை ரூ.3 ஆயிரத்து 500 வீதம் வழங்கப்பட்டது. தற்போது மக்களைத்தேடி மருத்துவம் என்ற முதல்-அமைச்சரின் உன்னதமான திட்டத்தின் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு வீடு வீடாக சென்று மாத்திரை கொடுக்கும் பணியை செய்து வருகிறோம். இதற்காக ஊக்கத்தொகை ரூ.1,000 வழங்கப்படுகிறது. தற்போது பணிச்சுமை அதிகமாக இருப்பதால் எங்களுக்கு கொடுக்கப்படும் ஊக்கத்தொகையை ஊதியமாக்கி, எங்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.