ராசிபுரம் அருகே தனது கையெழுத்தை பயன்படுத்தி ஊராட்சி நிர்வாக பணம் கையாடல் கலெக்டர் அலுவலகத்தில் துணைத்தலைவர் புகார் மனு
ராசிபுரம் அருகே தனது கையெழுத்தை பயன்படுத்தி ஊராட்சி நிர்வாக பணம் கையாடல் கலெக்டர் அலுவலகத்தில் துணைத்தலைவர் புகார் மனு
ராசிபுரம் அருகே தனது கையெழுத்தை பயன்படுத்தி ஊராட்சி நிர்வாக பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் துணைத்தலைவர் புகார் மனு அளித்தார்.
பணம் கையாடல்
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பி.ஆயிபாளையம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சத்யா நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் கடந்த 5 மாதத்தில் ஊராட்சி செலவுக்காக என்னிடம் 2 கையெழுத்துக்கள் மட்டுமே ஊராட்சி செயலாளர் பெற்றிருந்தார். ஆனால் எனது கையெழுத்தை மோசடியாக தயார் செய்து ஊராட்சியின் 1-ம் நம்பர் கணக்கில் இருந்து ஊராட்சி செயலாளரும், தலைவரும் பணம் எடுத்து இருப்பதாக எனக்கு தெரியவந்தது.
இதையடுத்து நான் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று கடந்த 5 மாத கணக்கு அறிக்கையை பெற்று பார்த்தேன். அதில் நான் பல்வேறு பி.எப்.எம்.எஸ்.சில் கையெழுத்திட்டது போல், வங்கியில் கொடுத்து ஊராட்சி மன்றத்தின் பணம் லட்சக்கணக்கில் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது.
உரிய நடவடிக்கை
இதற்கு ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் காரணமாகும். இதுகுறித்து ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நாமக்கல் மாவட்ட திட்ட இயக்குனருக்கு மனு அளித்து இருந்தேன். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது கையெழுத்தை மோசடியாக பயன்படுத்தி வங்கியில் இருந்து ஊராட்சி நிர்வாகத்தின் பணத்தை கையாடல் செய்த செயலாளர் மற்றும் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.