ஏலச்சீட்டு மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு


ஏலச்சீட்டு மோசடி வழக்கை  பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற வேண்டும்  பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
x
நாமக்கல்

நாமக்கல்லில் நடந்த ஏலச்சீட்டு மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி, இழந்த பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

ஏலச்சீட்டு

நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது 51). இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அப்பகுதியில் சீட்டு நடத்தி வந்தார். அவர் ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் நாமக்கல் மட்டும் இன்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 150 பேர் ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தனர்.

கலைச்செல்வியின் மகள் சிந்துஜா, சகோதரி மலர்கொடி, தந்தை பழனியாண்டி, தாயார் செல்லம்மாள் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பொன்னுசாமி, அவரது மனைவி நிர்மலா ஆகியோர் ஏலச்சீட்டு நடத்த உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது.

சரண்

இந்த நிலையில் கலைச்செல்வி திடீரென மாயமாகி விட்டார். இதனால் கோடிக்கணக்கில் பணம் செலுத்திய முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்ததை அறிந்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை தீவிரமாக தேடிய நிலையில் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கலைசெல்வி சரண் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

பொருளாதார குற்றப்பிரிவு

இந்நிலையில் கலைச்செல்வியிடம் ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திரண்டு வந்து போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

சீட்டு பணம் மோசடி வழக்கை சாதாரண மோசடி வழக்காக போலீசார் பதிவு செய்தும், குற்றம்சாட்டப்பட்ட சிந்துஜா, நிர்மலா, செல்லம்மாள், பழனியாண்டி ஆகிய 4 பேரை வழக்கில் இருந்து நீக்கம் செய்தும், சொத்துக்களை ஜப்தி செய்யாமலும் உள்ளனர்.

அதனால் இந்த வழக்கை மறு விசாரணை செய்ய நீதிமன்றத்தில் அனுமதி பெற்று பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி, அனைத்து குற்றவாளிகளையும் வழக்கில் சேர்த்து, எங்களிடம் ஏமாற்றிய சீட்டு பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story