கொல்லிமலையில்சட்டவிரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கைமலைவாழ் பெண்கள், கலெக்டரிடம் மனு


கொல்லிமலையில்சட்டவிரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கைமலைவாழ் பெண்கள், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 6 Feb 2023 7:00 PM GMT (Updated: 6 Feb 2023 7:01 PM GMT)
நாமக்கல்

கொல்லிமலையில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மழைவாழ் பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

சட்டவிரோத மது விற்பனை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் செம்மேடு, செங்கரை, சோளக்காடு ஆகிய பகுதியில் 3 டாஸ்மாக் கடை செயல்படுகிறது. ஆனால் மேலும் சில பகுதிகளில் சட்டவிரோதமாக சந்துக்கடைகளில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் நேற்று கொல்லிமலை தேவனூர்நாடு ஊராட்சி பின்னம்பட்டியை சேர்ந்த மலைவாழ் பெண்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேவனூர்நாடு பின்னம்பட்டியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் பஸ் ஏறுவதற்கு வெண்டலபாடி பஸ் நிறுத்தம் செல்ல வேண்டும். அந்த பகுதியில் சந்துக்கடை ஒன்று செயல்படுகிறது. அங்கு மதுப்பிரியர்கள் குடித்து விட்டு போதையில் அவ்வழியாக செல்பவர்களை தகாத வார்த்தையால் திட்டுகின்றனர்.

அதனால் அந்த வழியாக பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பெண்கள், மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு சந்துக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜல்லிக்கட்டு

இதேபோல் மாணிக்கம்பாளையம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்செங்கோடு தாலுகா கூத்தம்பூண்டி கிராமம் மேட்டுப்புதூரில் ஏப்ரல் மாதம் 16-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்துள்ளோம்.

சுப்ரீம் கோர்ட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஜல்லிகட்டு காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு விதிமுறைகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டை நடத்த எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

விவசாய சங்கத்தினர் மனு

இதேபோல் தூசூர் ஏரி ஓடை புறம்போக்கு பாசன விவாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் அலங்காநத்தம் அடுத்த பாலப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு பாலப்பட்டி மற்றும் புதுக்கோட்டை கிராம எல்லைக்குட்பட்ட பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. எங்கள் நிலங்களுக்கு அருகில் கீழ் மற்றும் மேல்புறத்தில் தூசூர் ஏரி ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. தற்போது ஓடையில் நீர் நிரம்பி வழிந்தோடி வருகிறது. விவசாய நிலங்களில் நெல், பருத்தி சாகுபடி செய்துள்ளோம்.

இந்த நிலையில் ஓடை புறம்போக்கில் சாலை அமைக்க ஊராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த ஓடை புறம்போக்கு நிலம் பொதுப்பணித்துறைக்கு பாத்தியப்பட்டது. இங்கு பணிகள் மேற்கொள்ள எவ்வித உரிமையும் இல்லை. அங்கு சாலை அமைத்தால், நீர்நிலை சரியான முறையில் செல்லாமல், நீர்தேக்கம் ஏற்பட்டு வயல்களுக்குள் நீர் புகும் அபாயம் உள்ளது.

அதனால் தூசூர் ஏரியின் தண்ணீர் செல்லும் ஓடை புறம்போக்கு நிலத்தில் பணிகள் மேற்கொள்வதை தடுக்கவும், தற்போதுள்ள இயற்கை அமைப்பை எவ்வித மாற்றமும் செய்யாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீட்டுமனை பட்டா

இதேபோல் எலந்தகுட்டை அருகே உள்ள காமராஜ்நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.


Next Story