நீரேற்று பாசன சங்கங்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு


நீரேற்று பாசன சங்கங்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 20 Jun 2023 12:30 AM IST (Updated: 20 Jun 2023 1:45 PM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக நீரை திருடும் நீரேற்று பாசன சங்கங்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

நாமக்கல்

மோகனூர் பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக நீரை திருடும் நீரேற்று பாசன சங்கங்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

மோகனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் உமாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மோகனூர் பகுதியில் பல நீரேற்று பாசன அமைப்புகள் காவிரி கரையோரம் கிணறுகளை வெட்டி சட்டத்திற்கும், அரசாணைக்கும் புறம்பாக காவிரி நீரை ராட்சத பம்பு செட்டுகளை வைத்து உறிஞ்சி எடுத்து, பூஞ்சை நிலங்களுக்கு நீர்பாசனம் செய்து, அதிக நீர்தேவை உள்ள பயிர்களான வாழை, கரும்பு, மரவள்ளி போன்றவற்றை பயிர் செய்து வருவாய் ஈட்டி வருகின்றன.

மேலும் ஒருசில நீரேற்று பாசன சங்கங்கள் ஊற்று நீருக்கான அரசாணை பெற்று, காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக வாய்க்கால் வெட்டி கிணற்றுக்குள் தண்ணீரை விட்டு, இலவச மின்சார இணைப்பு பெற்று ராட்சத பம்பு செட்டுகள் மூலம் புஞ்சை நிலத்திற்கு காவிரி நீரை திருடி செல்கின்றன.

மின்இணைப்பு துண்டிப்பு

நீரேற்று சங்கங்கள் சட்டத்திற்கு புறம்பாகவும், அரசாணையை புறந்தள்ளியும் செய்கின்ற நீர் திருட்டை தடுக்க வாய்க்கால் ஆயக்கட்டு விவசாயிகள் ஏற்கனவே பலமுறை மனு கொடுத்தனர். அதன்பேரில் அமைக்கப்பட்ட கமிட்டி, நீரேற்று பாசன சங்கங்களை ஆய்வு செய்து, நீர் திருட்டை ஊர்ஜிதம் செய்து அறிக்கை சமர்பித்து உள்ளது. ஏற்கனவே இருந்த மாவட்ட கலெக்டரும் ஊற்றுநீரை மட்டும் பயன்படுத்த வேண்டும் எனவும், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் சங்க நீரேற்று மோட்டார்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

எனவே தாங்கள் (கலெக்டர்) காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக நீரை திருடும் நீரேற்று பாசனங்களின் சங்க பதிவை ரத்து செய்தும், மின்இணைப்பை துண்டிக்கவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

இலவச வீடு

இதேபோல் மோகனூர் தாலுகா என்.புதுப்பட்டியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கடந்த 2012-ம் ஆண்டு சிறுபான்மை நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து, தாங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதால், அந்த இடத்தில் அரசு இலவசமாக வீடு கட்டி தர வேண்டும் என வலியுறுத்தி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.


Next Story