மோகனூர் அரசு மாதிரி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு


மோகனூர் அரசு மாதிரி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 20 Jun 2023 12:30 AM IST (Updated: 20 Jun 2023 1:49 PM IST)
t-max-icont-min-icon

மோகனூர் அரசு மாதிரி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை கடந்த 2019–20-ம் ஆண்டில் மாதிரி பள்ளியாக தமிழக அரசு தேர்வு செய்தது. இதை தொடர்ந்து ரூ.50 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கணினி மயமாக்கப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள், மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆய்வகங்கள், படைப்பாற்றல் கல்விக்கான ஆய்வுக்கூடம் (ரொபாடிக் கிளாஸ்), உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நவீன விளையாட்டு கூடம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கூடிய மாதிரி பள்ளி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் இப்பள்ளியில், எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கை முன் அறிவிப்பு இன்றி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது, பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நேற்று அவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-

மோகனூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டு (2023–24), புதிய மாணவ, மாணவிகள் சேர்க்கை இல்லை என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர். எங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க விரும்புகிறோம்.

மேலும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்த மாதிரி பள்ளியில் சேர்ந்து படிக்க விரும்புகின்றனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டும், மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்தவும், மீண்டும் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.


Related Tags :
Next Story