சட்டக்கல்லூரி பேராசிரியர்களை வேறு இடங்களுக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி


சட்டக்கல்லூரி பேராசிரியர்களை வேறு இடங்களுக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி
x

சட்டக்கல்லூரி பேராசிரியர்களை வேறு இடங்களுக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மதுரை

மதுரை,

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழக சட்டக்கல்லூரி விதிகளின்படி முனைவர் பட்டம் பெற்றவர்கள் அல்லது தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளை பயிற்றுவிக்க தகுதியானவர்கள். ஆனால் அந்த தகுதியுடையவர்கள் பெருமளவில் கிடைக்காததால், கவுரவ பேராசிரியர்கள் அந்த பதவிகளில் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

பல அரசு சட்டக்கல்லூரிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும், போதுமான பேராசிரியர்களும் கிடையாது.

இதனால் வரும் கல்வியாண்டில் தகுதியான பேராசிரியர்களை நியமிக்காமல் புதிய பிரிவுகளை ஏற்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் சொந்த மாவட்ட சட்டக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களை வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கையில் பொதுநலன் இருப்பதாக தெரியவில்லை என்றனர்.

இதையடுத்து இந்த மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story