கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் - சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு


கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் - சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
x

கரூரில் சோதனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்,

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். சென்னை, கோவை, கரூர், கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டனர். கோவை உள்பட சில பகுதிகளில் இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக், மின்சாரத்துறை ஒப்பந்ததாரர்கள்

தமிழகத்தில் 'டாஸ்மாக்' மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மீது வரி ஏய்ப்பு புகார்கள் வருமான வரித்துறைக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களுடைய வீடு மற்றும் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்துவதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசிய திட்டம் வகுத்து வந்துள்ளனர்.

அதன்படி தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அசோக்குமார் என்பவரின் பங்களா வீட்டிலும் சோதனை நடந்தது.

இதே போன்று கரூர், கோவை ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட அரசு ஒப்பந்ததாரர்களின் இல்லம் மற்றும் அலுவலகங்கள் உள்பட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. மொத்தம் 40 இடங்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை வளையத்துக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக மின்சாரத்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில்பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் வாகனம் உடைப்பு

இதனிடையே கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்தனர். அதேவேளை, வருமானவரித்துறை அதிகாரிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக திமுகவினரும் புகார் அளித்தனர்.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்நிலையில், கரூரில் சோதனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் இன்று வழக்குத்தொடரப்பட்டுள்ளது. 9 இடங்களில் வருமானவரித்துறை சோதனை தடுக்கப்பட்டு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரி வழக்கறிஞர் ராமசந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story