ரெயில்வே கேட்டில் ரப்பர் ஷீட் அமைக்கக்கோரி மனு

விபத்துகளை தடுக்க ரெயில்வே கேட்டில் ரப்பர் ஷீட் அமைக்க வேண்டும் என ரெயில் நிலைய மேலாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.
நெல்லை மாவட்ட பொதுஜன பொது நலச்சங்க தலைவர் முகமது அய்யூப், செயலாளர் முகமது உசைன், பொருளாளர் முகமது கசாலி உள்ளிட்டோர் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறிஇருப்பதாவது:-
நெல்லை பகுதியில் ரெயில்வே கேட்டுகள் சீரமைப்பு பணியின் போது தண்டவாளம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள ரோடுகளை உடைத்து, கற்களை பதிக்கிறார்கள். இதனால் அங்கு ரோடு மேடு, பள்ளமாகி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் கடந்து செல்லும் போது வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். முதியோர், பெண்கள், குழந்தைகள் பயணம் செய்யும் போது சிரமப்படுகிறார்கள்.
இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையம் ரெயில்வே கிராசிங்கில் இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டபோது கேட் பகுதியில் நவீன 'ரப்பர் ஷீட்' பொருத்தப்பட்டுள்ளது. இது வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல வசதியாக உள்ளது. அதேபோல் நெல்லை குறுக்குத்துறை, கொக்கிரகுளம், பேட்டை, தாழையூத்து, குலவணிகர்புரம், குன்னத்தூர் ரோடு உள்ளிட்ட அனைத்து ரெயில்வே கேட் பகுதிகளிலும் ரோட்டில் ரப்பர் ஷீட் பதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.






