மகன்களிடமிருந்து சொத்துக்களை மீட்டுத் தரக்கோரி முதியவர் மனு
திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் முதியவர் ஒருவர் தனது மகன்களிடமிருந்து சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி தரையில் படுத்து கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். மொத்தம் 350 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தரையில் படுத்து கதறி அழுதார்
கூட்டத்தில் தும்பேரி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் அளித்துள்ள மனுவில் தும்பேரி கிராமத்தில் உள்ள நிலையகுண்டு சதுர ஏரியை தூர்வாரி அளந்து பராமரிப்பு செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. திருப்பத்தூர் அருகே உள்ள மொளகரம்பட்டி, காரி வட்டத்தை சேர்ந்த 70 வயது முதியவர் லிங்கன் தனது மனைவியுடன் மனு கொடுக்க வந்து இருந்தார். அதிகாரிகளிடம் மனுவை வழங்கி அவர் திடீரென அதிகாரிகளின் காலில் விழுவதாக கூறி கூறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகளின் முன்பு தரையில் படுத்து எனது மகன்களிடம் இருந்து எங்களை காப்பாற்றி, சொத்தை மீட்டு தாருங்கள் என கதறி அழுதார். இதனால் குறைதீர்வு கூட்டரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் அவரிடம் இருந்து மனுவை பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும்
அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில், ''எனது பெயரில் 4 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை 2013-ம் ஆண்டு என்னுடைய இரு மகன்கள் பாகப்பிரிவினை செய்து தரக்கோரி அடிக்கடி வீட்டிற்கு வந்து சண்டைபோட்டு தகராறில் ஈடுபட்டதால் நானும் எனது மனைவியும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக சொத்தை 2 பேருக்கும் பிரித்து கொடுத்துவிட்டேன். தற்போது நாங்கள் மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறோம்.
எங்கள் பிள்ளைகள் எங்களை கவனிக்காமல் அடித்து கொடுமை படுத்த ஆரம்பித்து விட்டனர். இதுகுறித்து கந்திலி போலீஸ் நியைத்தில் புகார் தொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் சொத்தை மகன்களிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.
நலத்திட்ட உதவி
மேலும் குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் 9 பேருக்கு ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி வழங்கினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், தனித்துணை கலெக்டர் கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.