தென்காசி வணிகவரித்துறை அலுவலகத்தில் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு
தென்காசி வணிகவரித்துறை அலுவலகத்தில் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பு கூடுதல் செயலாளர் ஆர்.கே. காளிதாசன் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் தென்காசி வணிகவரித்துறை உதவி ஆணையர் ஜெயராஜிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
வணிகவரித்துறை மூலம் சில்லறை கடைகளில் ஆய்வு செய்வது தொடர்பாகவும், டெஸ்ட் பர்சேஸ் செய்வது தொடர்பாகவும் தமிழக அனைத்து வணிகர்களின் சார்பில் கருத்துக்களும் எதிர்ப்புகளும் பதிவு செய்யப்பட்டது. மீண்டும் அதிகாரிகள் ரூ.20,000 வரை அபராதமாக வசூலிப்பதாக புகார்கள், சங்கத்தின் நிர்வாகிகளுக்கு வந்த வண்ணம் உள்ளன. அனைத்து சில்லறை கடைக்காரர்களும் தாங்கள் பொருட்களை வாங்கும் போது அதற்கான வரி செலுத்தியே பொருட்களை வாங்கி வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். அந்த பொருட்கள் ஏற்கனவே வரிவிதிப்புக்கு உட்பட்டது. ஆனாலும் வணிகவரித்துறை அதிகாரிகள் சில்லறை கடைகளில் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில் பொருட்களை வாங்கி அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என்று கூறி அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையது அல்ல. இது சில்லறை சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தையே மிகப்பெரும் கேள்விக்குறியாக்கும் செயலாகும்.
வரிஏய்ப்பு செய்கிறவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எதிரானது அல்ல. அரசை ஏமாற்றி வரிஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் சில்லறை வியாபாரிகள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பு மாவட்ட செயலாளர் கணேசன், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் விஜய் சிங் ராஜ், பொருளாளர் ஆரோக்கியராஜ், ஆலோசகர் செல்வராஜ், காமராஜ் மார்க்கெட் சங்க செயலாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.