பயிர் காப்பீடு செய்த சின்ன வெங்காயத்துக்கு இழப்பீடு தொகை பெற்றுத்தர கோரி மனு


பயிர் காப்பீடு செய்த சின்ன வெங்காயத்துக்கு இழப்பீடு தொகை பெற்றுத்தர கோரி மனு
x

பயிர் காப்பீடு செய்த சின்ன வெங்காயத்துக்கு இழப்பீடு தொகை பெற்றுத்தர கோரி மனு அளிக்கப்பட்டது.

அரியலூர்

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளில் சிலர் வந்து ஒரு மனு அளித்தனர்.

அதில், பிரதம மந்திரி வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தில் 2020-21-ம் ஆண்டு ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காய பயிருக்கு காப்பீடு செய்திருந்தோம். ஆனால் எங்களுக்கு இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. எனவே எங்களுக்கு காப்பீடு இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், விவசாயம் செய்யாதவர்களுக்கு பயிர் காப்பீட்டிற்கான இழப்பீடு தொகை கிடைத்துள்ளது. ஆனால் உண்மையில் விவசாயம் செய்யும் நாங்கள் பயிர் காப்பீட்டுக்கான தொகை கட்டியும், இழப்பீடு தொகை கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் கூறினர்.

முறைகேடு

பெரம்பலூர் தாலுகா, மேலப்புலியூர் கிராம ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களில் சிலர் வந்து கொடுத்த மனுவில், எங்கள் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளது. அதில் சம்பந்தப்பட்டவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், என்று கூறியிருந்தனர். மேலும் அவர்கள் 100 நாள் வேலையில் சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினர்.

முடி திருத்தும் தொழிலாளர்கள் மனு

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், பெரம்பலூர் நகரத்தில் உள்ள முடி திருத்தும் கடைகளில் வெட்டப்படும் தலை முடிகளை திறந்தவெளியில் கொட்ட முடியாது. இதனால் சாக்குப்பையில் முடி கழிவுகளை சேகரித்து வைத்து, நகராட்சி தூய்மை காவலர்கள் கொண்டு வரும் குப்பை வண்டிகளில் அவற்றை கொட்ட சென்றால், அவர்கள் அதனை வாங்க மறுக்கின்றனர். எனவே நகராட்சி தூய்மை காவலர்கள் முடி கழிவுகளை குப்பை வண்டிகளில் வாங்கிச்செல்ல நகராட்சி நிர்வாகத்தினை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. முன்னதாக இது தொடர்பான கோரிக்கை மனு நகராட்சி அலுவலகத்திலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 283 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் பெரம்பலூரில் உள்ள காது கேளாதோர் சிறப்பு பள்ளிக்கு அரசு பஸ்சில் இலவசமாக வந்து செல்வதற்கு ஏதுவாக 17 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்பட்டது.

இலவசமாக மனு எழுதி கொடுக்கப்படுமா?

வாரந்தோறும் திங்கட்கிழமையன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மனு கொடுக்க வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் ஏழை, எளிய மக்கள். மேலும் மனு எழுதி கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே சுமார் 10 பேர் உள்ளனர். அவர்கள் ஒரு மனு எழுதி கொடுப்பதற்கு பொதுமக்களிடம் இருந்து கட்டணமாக ரூ.30 வசூலிக்கின்றனர். ஆனால் அவர்கள் பொது பிரச்சினைக்கு கூட தனித்தனியாக மனு எழுதி கொடுத்து கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ஏழை, எளிய மக்கள் ரூ.30 செலுத்த சிரமப்படுகின்றனர். மனு அளிக்க வரும் பொதுமக்களில் சிலருக்கு எழுத படிக்க தெரியாத நிலை உள்ளது. முந்தைய காலகட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுப்பதற்கு தன்னார்வலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் தற்போது இலவசமாக மனு எழுதி கொடுக்கப்படுவதில்லை. எனவே கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுப்பதற்கு தன்னார்வலர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story