தொழில் அதிபரின் மனைவி முன்ஜாமீன் கேட்டு மனு
பெண் ஊழியர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழில் அதிபரின் மனைவி முன்ஜாமீன் கேட்டு கோவை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்
கோவை
பெண் ஊழியர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழில் அதிபரின் மனைவி முன்ஜாமீன் கேட்டு கோவை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
பெண் ஊழியர்
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதன் (வயது 50). தொழில் அதிபர். இவர் கோவை மற்றும் ஈரோட்டில் டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
ஈரோட்டில் உள்ள நிறுவனத்தில் பவானியை சேர்ந்த 37 வயது பெண் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அந்த பெண், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதனின் வீட்டுக்கு வந்தார்.
பின்னர் அவர் தீக்காயங்களுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். முதல் கட்ட விசார ணையில், அந்த பெண் மருத்துவச் செலவுக்கு நவநீதனிடம் பணம் கேட்டதாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது.
வாக்குமூலம்
ஆனால் அந்த பெண் போலீசாரிடம் அளித்த மரண வாக்குமூ லத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த தன்னை தொழில் அதிபர் நவநீதன் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதனால் 6 முறை கர்ப்பம் ஆனதாகவும், அவர் மிரட்டி கர்ப்பத்தை கலைக்க செய்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை பெற பணம் உதவி கேட்டு சென்ற போது நவநீதனும், அவரது மனைவி அகிலாவும் சேர்ந்து தன் மீது தீவைத்து எரித்ததாகவும் கூறினார்.
இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
முன்ஜாமீன் மனு
இதைத்தொடர்ந்து தொழில் அதிபர் நவநீதன், அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் தேடுவதை அறிந்த நவநீதன், கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க ஆர்.எஸ்.புரம் போலீசார் குளித்தலை கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர். நவநீத னின் மனைவி அகிலா தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய 3 தனிப்படை போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆனால் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் பெறுவதற்காக அகிலா தனது வக்கீல்கள் மூலம் கோவை மாவட்ட கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்து உள்ளார். அந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.