சாதி சான்றிதழ்கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


சாதி சான்றிதழ்கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x

குடுகுடுப்பை அடித்து தங்களின் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 234 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் எருத்துக்காரன்பட்டி கிராம மக்கள் தங்களின் பிள்ளைகளுடன் வந்து அளித்த மனுவில், அரியலூர் மாவட்டத்தில் எருத்துக்காரன்பட்டி கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளாக இந்து கணிக்கர் சமூகத்தை சேர்ந்த 450-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்களது குழந்தைகள் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல்வேறு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். அவர்களது மேற்படிப்பிற்காக இந்து கணிக்கர்கள் எஸ்.டி. வகுப்பு சாதி சான்றிதழ் வழங்க வேண்டுமென அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித பயனுமில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். மனு கொடுக்கும்போது அவர்கள் குடுகுடுப்பை அடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வாய்மொழி உத்தரவின்பேரில்...

இதேபோல் தனியார் கணினி நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், புதிதாக தொடங்கப்பட்ட அரியலூர் மருத்துவக்கல்லூரிக்கு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கும், அலுவலக பயன்பாட்டிற்கும் மருத்துவ நிர்வாகத்திடம் இருந்து அலுவலக கண்காணிப்பாளர் வாய்மொழி உத்தரவின்பேரில் 6 கணினிகள், பிரிண்டர்கள், ஸ்கேனர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்டது. ஓராண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் இதுவரை இதற்கு உண்டான தொகையான ரூ.6 லட்சத்து 54 ஆயிரத்து 556-ஐ இதுநாள் வரை வழங்கவில்லை. எனவே இந்த தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரியை ஆழப்படுத்த வேண்டும்

பாளைப்பாடியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாளை திருநாவுக்கரசு அளித்த மனுவில், சோழப்பேரரசி செம்பியன் மாதேவியால் உருவாக்கப்பட்ட கண்டிராதித்தம் பேரேரியை தூர்வாரி ஆழப்படுத்த பொதுப்பணித்துறை சார்பில் ரூ.7 கோடி மதிப்பீடு செய்து அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதற்குண்டான பணிகள் இதுநாள் வரை தொடங்கவில்லை. தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் இந்த தருணத்தில் ஏரியை ஆழப்படுத்த வேண்டும். இந்த ஏரியினால் அருகில் உள்ள கிராமங்களில் சுமார் 15,000 ஏக்கர் நிலம் பயன் அடைந்து வருகிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.எம்.குமார் அளித்த மனுவில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும், சட்டவிரோத கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 5,112 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தனித்துணை கலெக்டர் குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story