பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரி மனு
பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரி மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் மத்திய சங்க துணை பொதுச்செயலாளர் முருகன் தலைமையில் துணைத்தலைவர் பிரபு, மலைக்கோட்டை கிளை செயலாளர் அரவிந்த்ராஜ், பொருளாளர் சாய்ராம், துணை செயலாளர்கள் சுப்ரமணியன், குணசேகரன் மற்றும் நிர்வாகிகள், அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் சப்-கலெக்டர் சரண்யாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 1988-ன் படி பஸ் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணம் செய்வது தடை செய்துள்ளது. ஆனால் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் விபத்து அபாயம் குறித்த எச்சரிக்கை செய்தாலும் பஸ்களின் படிக்கட்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள். மீறி தட்டிக்கேட்டால் எங்களை தாக்க வருகிறார்கள். மேலும் அவர்களால் விபத்து நேரும்போது நாங்கள் துறை ரீதியான மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் உள்ளாகிறோம். எனவே விபத்துகளை தவிர்க்க அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.