பள்ளி தலைமை ஆசிரியையை இடம் மாற்றக்கோரி கல்வி அதிகாரியிடம் மனு
பள்ளி தலைமை ஆசிரியையை இடம் மாற்றக்கோரி கல்வி அதிகாரியிடம் மனு அளித்தனர்.
அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கே.புதுப்பட்டி அருகே கழனிவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர் ஜெயந்தி. இவரை பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி சந்திக்க சென்றதாகவும், அப்போது பள்ளி தலைமை ஆசிரிைய ஜெயந்தியிடம் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும். அந்த கூட்டத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி, அடிப்படை வசதிகள் நிறை, குறை ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த பள்ளி தலைமை ஆசிரிைய ஜெயந்தி அரசு குறிப்பிட்டுள்ள நாளில் தான் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த முடியும். இன்று நடத்த முடியாது, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் என பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை அவமரியாதையாக நடத்தியதாகவும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றாமல் இருப்பதாகவும், நிறைவேற்றுவதற்கு தடையாகவும் முட்டுக்கட்டையாகவும் உள்ளார். ஆகவே பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தியை உடனடியாக இடம் மாற்றம் செய்ய வேண்டும் என அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலரிடம் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனு அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.