இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனு - ஈபிஎஸ் தரப்பின் அடுத்த மூவ்


இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனு - ஈபிஎஸ் தரப்பின் அடுத்த மூவ்
x
தினத்தந்தி 3 Feb 2023 8:07 AM GMT (Updated: 3 Feb 2023 8:07 AM GMT)

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்துடன் போட்டியிட ஏதுவாக சின்னத்தை ஒதுக்க மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர்.

இவர்களில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி கடந்த மாதம் (ஜனவரி) 30-ந்தேதி ஆஜராகி, இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம் உள்ளிட்ட கடந்த ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றி, அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதால் தனது கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய அனுமதி அளித்தது.

இது தொடர்பாக 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 3-ந் தேதிக்கு (இன்று) நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இதனையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அதில் இரட்டை இலை சின்னம் அளிக்க கோரி தேர்தல் ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி தரப்போ, ஓ.பன்னீர்செல்வம் தரப்போ அணுகவில்லை. கையெழுத்திட அதிகாரம் உள்ளவர் என தேர்தல் ஆணைய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டவர் கையெழுத்துள்ள வேட்பு மனுவைவே ஏற்க முடியும்.

ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ தேர்தல் ஆணையத்தின் பணி கிடையாது. வாக்காளர் பட்டியலை தயார் செய்வதும், தேர்தல் பணிகளை கண்காணிப்பதும் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி.

ஒரு கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவது இல்லை. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார்.

சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள பொதுக்குழு விவகாரம் தொடர்புடைய மேல்முறையீட்டு மனுக்களும், குறிப்பாக ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட விதம் தொடர்பாக பல்வேறு வழக்குகளும், எதிர்வழக்குகளும் நிலுவையில் இருப்பதால், ஜூலை 11-ந்தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆவணங்களாக ஏற்று தேர்தல் ஆணையம் பதிவேற்றவில்லை.

தற்போதைய சூழலில், இடையீ்ட்டு மனு தொடர்பாக விரிவான பதில் மனுவை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யவில்லை. விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவும், தேவைப்படும் பட்சத்தில் விசாரணையின்போது விரிவான வாதங்களை முன் வைக்கவும் சுப்ரீம் கோர்ட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளிக்க கோருகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தடை ஏதும் இதுவரை விதிக்காததை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி தரப்பு மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்துடன் போட்டியிட ஏதுவாக சின்னத்தை ஒதுக்க மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story