மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மனு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ேநற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் உள்பட மொத்தம் 382 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளியிடம் இருந்து மட்டும் 47 மனுக்கள் பெறப்பட்டன. இதையடுத்து 14 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சிமெண்டு ஆலைக்கு தடை வேண்டும்
கூட்டத்தில், வெள்ளியணை அருகே உள்ள கம்பளி நாயக்கன்புதூரை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் சுமார் 3,500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
இந்நிலையில் வெள்ளியணை பகுதிக்குட்பட்ட தேவகவுண்டனூரில் தனியார் சிமெண்டு ஆலை தொடங்கப்பட உள்ளதாக தெரிகிறது. அப்படி ஆலை தொடங்கினால் இப்பகுதியில் மாசு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும். எனவே இங்கு சிமெண்டு ஆலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.
பணி நிரந்தரம் வேண்டும்
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறப்பு ஆசிரியர்களாக கடந்த 2002-ம் ஆண்டு முதல் கரூர் மாவட்டத்தில் 32 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறோம். எனவே எங்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.
கரூர் சமூக தன்னார்வ நண்பர்கள் அமைப்பு சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில், சமூக ஆர்வலர் சண்முகம் மற்றும் தமிழ்கவி, ராஜகோபால் ஆகியோர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.
வழிகாட்டும் பலகை வைக்க வேண்டும்
கரூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பொன் முத்துக்குமார் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர்-திண்டுக்கல் சாலையில் உள்ள சுங்ககேட் சாலை குறுகலாக உள்ளது. மேலும் அப்பகுதியில் திருச்சிக்கு செல்லும் சாலையும் பிரிவதால் வாகன ஓட்டிகள், திருச்சி மற்றும் திண்டுக்கல் செல்லும்போது எந்த சாலையில் செல்வது என தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். மேலும் அங்குள்ள சிக்னல் விளக்குகள் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சிக்னல் விளக்கு பகுதியில் வழிகாட்டும் பெயர் பலகை வைக்க வேண்டும் என அதில் கூறியிருந்தார்.