சிறு-குறு தொழிற்சாலை உரிமையாளர்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து கலெக்டரிடம் மனு


சிறு-குறு தொழிற்சாலை உரிமையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 9 Oct 2023 10:15 PM GMT (Updated: 9 Oct 2023 10:16 PM GMT)

மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி சிறு-குறு தொழிற்சாலை உரிமையாளர்கள் கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

சிறு, குறு தொழிற்சாலைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,300-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. திண்டுக்கல், நிலக்கோட்டையில் உள்ள தொழிற்பேட்டைகளில் மட்டுமின்றி தனியாகவும் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பிளாஸ்டிக் பொருட்கள், எந்திரங்களின் உதிரிபாகங்கள், கயிறு உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இங்கு தயாராகும் பொருட்கள் பல மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் மின்கட்டண உயர்வால் தொழில் பாதிக்கப்படுவதாக சிறு, குறு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும் மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வேலைநிறுத்தம் உள்பட 4 கட்ட போராட்டத்தை நடத்தினர்.

கருப்பு பேட்ஜ் அணிந்து மனு

இதற்கிடையே நேற்று சிறு, குறு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து இருக்கும் நிலையில், மின்கட்டண உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். எனவே தொழில்களை பாதுகாக்க மின்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும். அதன்படி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளான நிலை கட்டணம், சோலார் நெட்வொர்க் கட்டணம், குறிப்பிட்ட மணிநேர கட்டணம் ஆகியவற்றை திரும்ப பெற்று தொழில்களை பாதுகாக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.


Next Story