செங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி ஊராட்சியில் ஏற்கனவே ரூ.31 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்திற்கு கூடுதல் கட்டிடம் ரூ.16 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கும், மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஊனமாஞ்சேரி கிராமத்திற்கு செல்லும் 2 கிலோமீட்டர் தூரம் கொண்ட பிரதான சாலையை ரூ.2 கோடி 80 லட்சம் மதிப்பில் தார் சாலையாக அமைப்பதற்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றியக்குழு துணை தலைவர் வி.எஸ்.ஆராமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் எம்.எல்.ஏ.விடம், முன்னாள் ஊனமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவரும், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க அவைத் தலைவருமான ஜெ.வி.எஸ்.ரங்கநாதன் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் ஊனமாஞ்சேரி ஊராட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் 160 இருளர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டரிடம் பேசி 160 இருளர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். முன்னதாக ஊனமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீ சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் நேதாஜி, ஊனமாஞ்சேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தனசேகரன், திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெ.வி.எஸ்.சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.