மனுதாரருக்கு சாட்சியம் அளிக்க 3 முறை ஆஜராகாத பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
மனுதாரருக்கு சாட்சியம் அளிக்க 3 முறை ஆஜராகாத பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கலா கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு கொலை முயற்சி வழக்கில் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த வழக்கில் மனுதாரரான தழுதாழை அம்பேத்கர் தெருவை சேர்ந்த செல்லத்துரை என்பவர் இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மனுதாரர் செல்லத்துரைக்கு சாட்சியம் அளிக்க அப்போதைய அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாவுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 12, 26-ந் தேதிகளிலும், கடந்த 9-ந்தேதியும் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் தொடர்ந்து 3 முறையும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மூர்த்தி ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்தும், வருகிற 23-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டார். கலா தற்போது கரூர் மாவட்டம், மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவர் அந்த வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கடந்த மாதம் 1-ந்தேதி ஜாமீனில் விடுவிக்கக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.