72 மணி நேரத்துக்குள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் -அண்ணாமலை வலியுறுத்தல்


72 மணி நேரத்துக்குள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் -அண்ணாமலை வலியுறுத்தல்
x

72 மணி நேரத்துக்குள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அண்ணாமலை கெடு விதித்துள்ளார்.

ஆலந்தூர்,

பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. கூறாதபோதும் அதனை செய்து வருகிறது.

ஆனால் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.5 குறைப்பதாகவும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தலா ரூ.100 தருவதாகவும் சொல்லி ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின் பெட்ரோலுக்கு ரூ.3 மட்டும் குறைத்தனர். டீசல் விலையை குறைக்கவில்லை. கணக்கு எடுப்பதாகவும் நேரம் காலம் எதுவும் சொல்லவில்லை எனவும் தமிழக நிதி அமைச்சர் கூறி உள்ளார்.

மத்திய அரசின் கலால் வரியை குறைத்தால் நாங்கள் குறைப்பதாக கூறி உள்ளனர். 2014-ம் ஆண்டுக்கு பின் தமிழக அரசு வாட் வரியை ஒரு லிட்டருக்கு ரூ.7 அதிகப்படுத்தி உள்ளது. மாநில அரசுக்கு 2014-ம் ஆண்டு ரூ.12 ஆயிரம் கோடி வருமானம் இருந்தது. ஆனால் தற்போது பெட்ரோலிய பொருட்கள் மூலம் ரூ.19 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. அதை பற்றி தமிழக நிதி அமைச்சர் பேசுவதில்லை.

72 மணி நேரம் கெடு

தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அறிவிக்கும்போது பா.ஜ.க. தலைவர்களிடம் கேட்டா அறிவித்தார்கள். அரசியல் லாபத்திற்காக கூறிவிட்டு தற்போது காரணம் கூறுகின்றனர். மக்கள் விரோத அரசு எத்தனை முறை சொன்னாலும் மக்களின் துன்பத்தை கண்டு கொள்ளாமல் அரசியல் லாபத்திற்காக செயல்படும் தமிழக அரசை மக்கள் தண்டிக்க வேண்டும்.

சமையல் கியாஸ் விலையை ரூ.100 குறைப்பதாக சொன்னார்கள். உஜ்வாலா திட்டத்தில் உள்ள 9 கோடி மக்கள் பயன்பெறும் ஒரு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் என 12 சிலிண்டருக்கு வழங்க பிரதமர் உத்தரவிட்டு உள்ளார். ஆனால் மாநில அரசு ரூ.100 குறைக்க மறுத்து வருகிறது.

மாநில அரசுக்கு பா.ஜ.க. 72 மணி நேரம் கெடு தரப்போகிறது. 72 மணி நேரத்திற்குள் தி.மு.க. மக்களிடம் தந்த தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்த வேண்டும். 3 நாட்களுக்குள் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சிலிண்டருக்கு ரூ.100 என செய்ய வேண்டும்.

கோட்டை முற்றுகை

இல்லையென்றால் பா.ஜ.க. தொண்டர்களுடன் கோட்டையை முற்றுகையிட்டு குறைக்க செய்ய முடியும் என்றால் அதை செய்ய பா.ஜ.க. தயாராக இருக்கிறோம். இதற்கு வழி தராமல் மாநில அரசு செய்ய வேண்டும்.

பேரறிவாளன் விடுதலையில் சட்ட நுணுக்கத்தில் 142-வது விதியை பயன்படுத்தி உள்ளனர். ஆனால் இதை ஏன் கொண்டாடப்பட வேண்டும்.

பேரறிவாளனை கட்டி தழுவியது...

பேரறிவாளனை முதல்-அமைச்சர் கட்டி தழுவியது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ஜெய்ப்பூரில் பா.ஜ.க. தலைவர்கள் தமிழக முதல்-அமைச்சர் எப்படிப்பட்டவர் என கேட்கின்றனர்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்த குற்றவாளியை கட்டி தழுவி வரவேற்று மரியாதை செய்வது சட்டம், ஒழுங்கை காக்கும் அவர் என்ன சொல்ல வருகிறார் என கேட்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story