ஜேடர்பாளையம் அருகே2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
ஜேடர்பாளையம் அருகே 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பரமத்திவேலூர்
பெட்ரோல் குண்டு வீச்சு
பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையத்தைச் சேர்ந்தவர் பூங்கோதை (வயது 50). நேற்று முன்தினம் இரவு பூங்கோதை மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு வீட்டுக்கு முன் புறம் வந்த மர்ம நபர்கள் கான்கிரீட் தரையின் மீது பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களை வீசியுள்ளனர். பாட்டில் உடையும் சத்தம் கேட்டு பூங்கோதை குடும்பத்தினர் வெளியே ஓடி வந்துள்ளனர். இதைப்பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மர்ம நபர்கள் வீசிய பெட்ரோல் குண்டுகளால் வீட்டின் முன்பு உள்ள தரையில் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல் (52) விவசாயி, இவரது வீட்டிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசி விட்டு சென்றுள்ளனர்.
போலீசார் விசாரணை
காலையில் எழுந்து வீட்டிற்கு வெளியே வந்த குழந்தைவேல் வீட்டின் முன்பு பெட்ரோல் நிரப்பப்பட்ட 2 பாட்டில்கள் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதிர்ஷ்ட வசமாக பெட்ரோல் குண்டு வெடிக்காததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இது குறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு, பூங்கோதை மற்றும் குழந்தைவேல் ஆகியோர் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வெடிக்காத பெட்ரோல் குண்டை கைப்பற்றி பெட்ரோல் குண்டை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேடர்பாளையம் அருகே 2 வீடுகள் முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.