சென்னை புளியந்தோப்பில் 2 ரவுடி வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு - மற்றொரு ரவுடி தப்பி ஓட்டம்


சென்னை புளியந்தோப்பில் 2 ரவுடி வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு - மற்றொரு ரவுடி தப்பி ஓட்டம்
x

சென்னை புளியந்தோப்பில் அடுத்தடுத்து 2 ரவுடி வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய மற்றொரு ரவுடி மற்றும் அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னை திரு.வி.க. நகர் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் மணி என்ற குள்ளமணி (வயது 28). ரவுடியான இவர் மீது திரு.வி.க.நகர், மாதவரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வழக்கு ஒன்றில் தண்டையார்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்குச்சென்ற மணி, கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்து, திருவொற்றியூர் பகுதியில் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு மணி, தனது நண்பர் சூர்யாவுடன் மோட்டார் சைக்கிளில் புளியந்தோப்பு வாசுகி நகர் 2-வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினார்.

சத்தம் கேட்டு வீட்டில் இருந்து பயந்தபடி வெளியே வந்த முதியவர் சீனிவாசன் (81) என்பவரை பார்த்து, "மணி வந்துபோனதாக உன் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்" என எச்சரிக்கை விடுத்துவிட்டு மணி அங்கிருந்து தப்பிச்சென்றார்.

அதன்பிறகு புளியந்தோப்பு காந்தி நகர் பகுதியில் வசிக்கும் தனது நண்பரும், ரவுடியுமான விமல் (30) வீட்டுக்கு சென்ற மணி, ''ஒருவரை கொலை செய்ய வேண்டும் வா'' என கூப்பிட்டார். அதற்கு விமல் வரமறுத்ததால் ஆத்திரம் அடைந்த மணி, விமல் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

அடுத்தடுத்து 2 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டு வெடிக்காததாலும், மற்றொரு வீட்டில் லேசான தீ விபத்து மட்டும் ஏற்பட்டதாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் உதவி கமிஷனர் அழகேசன் தலைமையில் புளியந்தோப்பு மற்றும் பேசின் பிரிட்ஜ் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மணியின் மாமாவும், பிரபல ரவுடியான அப்பு என்ற தினேஷ் கடந்த 2017-ம் ஆண்டு ஓட்டேரியில் கொலை செய்யப்பட்டார். அதற்கு பழி தீர்க்க விமல் வர மறுத்ததால் ஆத்திரத்தில் அவர் வீட்டிலும், முன்னதாக மணியின் நண்பர் செல்வம் என்பவருக்கு எதிராக செயல்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி மாரி என்பவரை எச்சரிக்கும் வகையில் அவர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசியது தெரிந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரவுடி மணி மற்றும் அவரது கூட்டாளி சூர்யா ஆகியோரை தேடி வருகின்றனர்.


Next Story