பெட்ரோல் விலை உயர்வுக்கும், மின் கட்டண உயர்வுக்கும் முடிச்சு போடக்கூடாது; அண்ணாமலை பேட்டி


பெட்ரோல் விலை உயர்வுக்கும், மின் கட்டண உயர்வுக்கும் முடிச்சு போடக்கூடாது; அண்ணாமலை பேட்டி
x

பெட்ரோல் விலை உயர்வுக்கும், மின் கட்டண உயர்வுக்கும் முடிச்சு போடக்கூடாது என்று அண்ணாமலை கூறினார்.

திருச்சி

செம்பட்டு:

விலை உயர்வு

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்வதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தியது பிரதமர் மோடியின் சமூக நீதி சிந்தனைக்கு எடுத்துக்காட்டு. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், அவர்களின் ஒரே ஒரு சாதனை அனைத்து இடத்திலும் விலையை உயர்த்தியது தான். சொத்து வரி, ஆவின் பொருட்கள் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பழிபோடுவது மட்டுமே வாடிக்கை

இந்த அரசு, செய்த தவறில் இருந்து பாடம் கற்காத அரசாக உள்ளது. இந்த அரசை கேள்வி கேட்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மத்திய அரசு கூறித்தான் மின் கட்டணத்தை உயர்த்தினோம் என்றார்கள். ஆனால் அவ்வாறு மத்திய அரசு கூறவில்லையே என்று விளக்கம் கேட்டதற்கு, மின் துறை அமைச்சர் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. மத்திய அரசின் மீது பழிபோடுவது மட்டும்தான் மாநில அரசின் வாடிக்கையாக இருக்கிறது. அமைச்சர்களும், சில ஒப்பந்ததாரர்களும் பயன் அடையவே விலைகள் உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் நம்முடைய கையில் இல்லை. அது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது. அந்த விலை உயர்வுக்கும், மாநில அரசு உயர்த்தும் விலை உயர்வுக்கும் முடிச்சு போடக்கூடாது.

மெத்தனப்போக்கால் கலவரம்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் விவகாரத்தில் மவுனம் காத்தது தி.மு.க.தான். அவர்களின் மெத்தனப்போக்கால் தான் கலவரம் நடந்தது. அனைத்து இடங்களிலும் அவர்களுக்கு கெட்ட பெயர் வர காரணம் தி.மு.க.வின் செயலின்மை. பாஸ்போர்ட் ஊழல் தனிமனிதன் தொடர்பானது அல்ல. அது இந்திய இறையாண்மையை பாதிக்கக்கூடியது. இது தொடர்பாக உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. மீது கவர்னரிடம் புகார் அளித்துள்ளோம். நிச்சயமாக இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். அமைச்சர்களின் அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்

இதைத்தொடர்ந்து அவர் காரில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர், அவர் காரில் நாமக்கல்லுக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story