சென்னையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம்: பெட்ரோல் பங்கிற்கு சீல்


சென்னையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம்: பெட்ரோல் பங்கிற்கு சீல்
x
தினத்தந்தி 30 Sep 2023 4:03 AM GMT (Updated: 30 Sep 2023 4:47 AM GMT)

சென்னையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பெட்ரோல் பங்கிற்கு சீல் வைத்துள்ளனர்.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு 7 மணியளவில் மழை பெய்தது. இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் கூரை திடீரென சரிந்து விழுந்தது. மழை காரணமாக பெட்ரோல் பங்கில் ஒதுங்கி நின்ற வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் அருகில் நின்றவர்கள் என பலர் பெட்ரோல் பங்க் கூரை விழுந்த விபத்தில் சிக்கினர்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பெட்ரோல் பங்க் கூரைக்குள் சிக்கியவர்களை மீட்க முற்பட்டனர். உடனடியாக இது குறித்து தீயணைப்பு நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 7 பேர் லேசான காயங்களுடன் தப்பினர். 7 பேர் இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டனர். ஜே.சி.பி. வைத்து மேற்கூரையை தூக்கி மீட்பு பணி நடந்தது.

இந்த விபத்தில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த மதுராந்தகத்தை சேர்ந்த கந்தசாமி (வயது 63) என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்ற 6 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயம் அடைந்த 7 பேரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் முதல் உதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இந்த விபத்து தொடர்பாக பங்க் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்த பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை சரிந்து விழுந்து பங்க் ஊழியர் உயிரிழந்த நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பெட்ரோல் பங்கிற்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story