விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை- மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்


தினத்தந்தி 3 April 2023 6:45 PM GMT (Updated: 3 April 2023 6:46 PM GMT)

விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு


விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

வீட்டுமனை பட்டா

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்கம் கூட்டமைப்பு மாநில தலைவர் ஆர்.ராஜரத்தினம் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-

எங்களது சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள 40-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரம் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளாக போராடி வருகிறோம். போராட்டம் நடத்தப்பட்டபோது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பட்டா விரைவில் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் வாடகை வீடுகள் கிடைப்பதில்லை. வீடுகள் அமைந்தாலும், வாகனங்களை நிறுத்தி செல்வதற்கு சிரமமாக உள்ளது. மாற்றுத்திறனாளிகளில் பெரும்பாலானவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கிறார்கள். எனவே அவர்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முன்னாள் படைவீரர் மாநாடு கூட்டமைப்பு தலைவர் பழனியப்பன் தலைமையில் அந்த அமைப்பினர் மனு கொடுப்பதற்காக வந்தனர். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், "ஒரு பதவி, ஒரு ஒய்வூதியம் என்ற அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தில் உள்ள பாகுபாடுகளை சரி செய்ய வேண்டும். முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர் விதவைகள் போன்றோருக்கு குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்", என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசாத கருத்துகளை பேசியதாக கூறி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஈரோடு மாவட்டத்தில் பட்டியலின சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் வன்முறைக்கு துணைபோகும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறப்பட்டு இருந்தது.

கடன் தள்ளுபடி

கொடுமுடி அருகே காரணாயம்பாளையத்தை சேர்ந்த மகளிர் சுயஉதவி குழுவினர் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-

நாங்கள் 9 பேர் இணைந்து முல்லை மகளிர் குழுவை நடத்தி வருகிறோம். மாதந்தோறும் ரூ.210 சேமித்து குட்டப்பாளையத்தில் உள்ள கொளாநல்லி குட்டப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கணக்கு தொடங்கினோம். நாங்கள் ரூ.4½ லட்சம் கடன் பெற்றிருந்தோம். 2 மாதங்களில் தலா ரூ.3 ஆயிரம் வீதம் 2 தவணை செலுத்தினோம். அதற்குள் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக தவணை தொகையை செலுத்த முடியவில்லை. எங்களது கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. ஆனால் நாங்கள் வாங்கிய கடனை செலுத்த வேண்டும் என்று கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் கூறுகிறார்கள். எனவே நாங்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ததை உறுதிபடுத்தி பணம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில அவர்கள் கூறிஇருந்தனர்.

சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், "எங்கள் பகுதியில் விவசாய பாசனம் இல்லாத நிலத்தை பாசன நிலம் என்று போலி ஆவணம் சமர்பித்து வழித்தடம் அமைக்க முயற்சி நடக்கிறது. இதன் மூலம் நிலத்தை விற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே வருவாய், நீர் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறிஇருந்தனர்.

மகன் மீது தந்தை புகார்

ஈரோடு பெரியசடையம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் (வயது 83) என்பவர் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-

எனது மனைவி நடக்க முடியாத நிலையில் படுக்கையில் உள்ளார். எங்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மகள்களின் கணவர்கள் இறந்துவிட்டனர். நான் வாங்கிய 1½ ஏக்கர் நிலத்தை தனித்தனி பட்டாவாக இருந்ததை ஒரே பட்டாவாக மாற்றி கொள்ளலாம் என்று கூறியதால் எனது மகன் கூறிய இடங்களில் கையெழுத்து போட்டு கொடுத்தேன். ஆனால், அவர் அந்த நிலத்தை அவரது பெயருக்கு தான செட்டில்மெண்ட் பத்திரமாக எழுதி மாற்றி கொண்டதுடன், அந்த நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து கடனும் வாங்கினார். ஆனால் கடன் தொகையை செலுத்தாததால் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்ய வந்தபோதுதான், எனது மகன் பெயரில் நிலம் இருப்பது தெரியவந்தது. நிலத்தை விற்று கடனை அடைத்தபிறகு பணத்தை கொடுப்பதாக எனது மகன் கூறினார். ஆனால் நிலம் விற்ற பணத்தையும் அவர் எடுத்து கொண்டு ஏமாற்றி விட்டார். அவர் என்னையும், எனது மனைவியையும் பராமரிப்பது இல்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.

பணிநியமன ஆணை

இந்த கூட்டத்தில் மொத்தம் 253 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். கூட்டத்தில் மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர் மஜரா நெறிபாறை காலனியை சேர்ந்த கனகராஜ் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால், அவரது தந்தை லட்சுமணனுக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினாா். அந்தியூர் அருகே பர்கூர் கிராம உதவியாளராக பணியாற்றிய சின்னசாமி பணிக்காலத்தில் மரணம் அடைந்ததால் அவரது மகன் கோவிந்தராஜிக்கு அலுவலக உதவியாளர் பணியும், சென்னிமலை கிராம உதவியாளராக பணியாற்றிய முருகேசன் என்பவர் பணிக்காலத்தில் மரணம் அடைந்ததால், அவரது மகன் அருள்குமாருக்கு கிராம நிர்வாக அதிகாரி பணியும் கருணை அடிப்படையில் வழங்கப்பட்டது. இதற்கான பணிநியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ், துணை கலெக்டர் (பயிற்சி) காயத்ரி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story