2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் நீட்டிப்பு; தமிழக அரசிடம் சாத்தியக்கூறு அறிக்கை சமர்பிப்பு
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் தமிழக அரசிடம் நேற்று சமர்பிக்கப்பட்டது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், ரூ.63 ஆயிரத்து 246 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு, மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை, மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் தற்போது சுரங்கம் தோண்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வழித்தடம் 3-ல் சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரையிலும், வழித்தடம் 5-ல் கோயம்பேடு முதல் ஆவடி வரையிலும் மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் தமிழக அரசிடம் நேற்று சமர்பிக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் சமர்பித்தார்.
புதிய சாத்தியக்கூறு அறிக்கையில், கோயம்பேட்டிலிருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை ரூ.6 ஆயிரத்து 376 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் 16.7 கிலோ மீட்டர் நீளத்துக்கும், வழித்தடம் 3-ல் சிறுசேரி முதல் கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை ரூ.5 ஆயிரத்து 458 கோடியே 6 லட்சம் செலவில் நீட்டிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதேபோல, திருப்போரூர், மாமல்லபுரம் வழியாக கேளம்பாக்கத்தின் தெற்கு விரிவாக்கத்தில் மேலும் ஆய்வு செய்யவும் பரிந்துரை செய்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.