பூட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்
சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் உதயசூாியன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாத தேர் திருவிழா கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
ஆடி மாத கடைசி வெள்ளியான நேற்று முன்தினம் ஊரணி பொங்கல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து மாரியம்மனை வழிபட்டனர்.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தேருக்கு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையில், மாவட்ட ஆவின் தலைவர் ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், இணை ஆணையர் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் ஜாகிர்தார் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து, செம்பராம்பட்டு கிராமத்தை சென்றடைந்தது.
இதில் உதவி ஆணையர் சிவாகரன், ஆய்வாளர் பாக்கியலட்சுமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி பூபதி, மாவட்ட கவுன்சிலர் சுகன்யா சுரேஷ், அரசு வக்கீல் பாலஅண்ணாமலை, சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணிதாகப்பிள்ளை, பூட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா கொளஞ்சியப்பன், துணைத்தலைவர் பச்சமுத்து, ஒன்றிய கவுன்சிலர் சரோஜா கோவிந்தன், செம்பராம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன், துணை தலைவர் சூர்யாசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் ராஜா, நிர்வாக அறங்காவலர் ஆறுமுகம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மஞ்சள் நீராட்டு விழா
தொடர்ந்து தேர் இன்றும்(ஞாயிற்றுக்கிழமை), நாளையும்(திங்கட்கிழமை) கிராமங்களின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலில் நிலையை வந்து அடைகிறது. நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.
முன்னதாக அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.