சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட பிசியோதெரபி டாக்டர் கைது
விக்கிரமசிங்கபுரத்தில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட பிசியோதெரபி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவர் கடந்த 22-ந் தேதி தனது வீ்ட்டின் முற்றத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 16 கிராம் தங்க நகையை மர்மநபர் பறித்துச் சென்றார். இச்சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் போலீசார் நடத்திய விசாரணையில், வீரவநல்லூரை சேர்ந்த நம்பிராஜன் மகன் நடேஷ் குமார் (வயது 33) என்பதும், இவர் லட்சுமியிடம் சங்கிலி பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர் பிசியோதெரபி டாக்டர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொரோனா காலத்தில் தொழில் நலிவடைந்ததாகவும், அது முதல் இதுபோன்ற திருட்டில் ஈடுபட்டு வந்ததாக அவர் கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.