தலைவாசல் அருகேபிசியோதெரபி டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலைகாட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு
தலைவாசல் அருகே பிசியோதெரபி டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டது.
தலைவாசல்
தலைவாசல் அருகே பிசியோதெரபி டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டது.
மரத்தில் ஆண் பிணம்
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி அரசு மறுவாழ்வு மையம் உள்ளது. இதன் அருகில் காட்டு பகுதியில் உள்ள மரத்தில் ஆண் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது. அந்த பிணம் அழுகிய நிலையில் இருந்தது.
தகவல் அறிந்த தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிசியோதெரபி டாக்டர்
பிணம் தொங்கிய இடத்தின் அருகில் டிராவல் பேக் ஒன்று இருந்தது. அதனை போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த அடையாள அட்டைகளை கொண்டு விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், விழுப்புரம் மாவட்டம் கம்பர் தெருவை சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் லட்சுமிவாசன் (வயது 47) என்பது தெரிய வந்தது.
உடனே போலீசார், டாக்டரின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த டாக்டரின் மனைவி நிர்மலா, அவருடைய 2 மகள்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
காரணம் என்ன?
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 20-ந் தேதி பிசியோதெரபி அசோசியேஷன் கூட்டம் இருப்பதாக கூறி லட்சுமிவாசன் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், அதன் பிறகு வீடு திரும்பவில்லையாம்.
இதனால் அவருடைய மனைவி நிர்மலா விழுப்புரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் அவரை தேடி வந்துள்ளனர். இதற்கிடையேதான் தலைவாசல் அருகே காட்டுப்பகுதியில் டாக்டர் லட்சுமிவாசன் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் லட்சுமிவாசனுக்கு சொந்தமான பேக்கில் பணம் இருந்ததால் அவர் தற்கொலை செய்து இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவர் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.