தண்ணீர் பந்தலை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியல்


தண்ணீர் பந்தலை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியல்
x

திருமயம் அருகே கோவில் திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

மலையகோவில்

திருமயம் அருேக மலையகோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறும். அப்போது மாங்குறிச்சிப்பட்டி கிராமத்தார்கள் சார்பில் அப்பகுதியில் உள்ள பொது இடத்தில் சாலையோரம் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்து அவ்வழியாக வரும் பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கி வந்தனர். இதற்கு பக்கத்து கிராமமான குலமங்கலத்தை சேர்ந்த மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இது சம்பந்தமாக கடந்த சில ஆண்டுகளாக இரு பிரிவினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

தண்ணீர் பந்தல் சூறை

இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மாங்குறிச்சிப்பட்டி கிராமத்தினர் தண்ணீர் பந்தல் அமைக்கும் இடத்தில் ஆஸ்பெட்டாஸ் சீட் அமைத்து உள்ளனர். இதனை அறிந்த குலமங்கலத்தை சேர்ந்த ஒரு பிரிவினர், மாங்குறிச்சிப்பட்டி கிராமத்தினருடன் வாக்குவாதம் செய்து வந்த நிலையில் ஆஸ்பெட்டாஸ் சீட்டு மூலம் அமைக்கப்பட்ட கொட்டகையை அடித்து சூறையாடினர்.

மறியல்

இதில் இருபிரிவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாங்குறிச்சிப்பட்டி கிராமமக்கள் புதுக்கோட்டை- பொன்னமராவதி சாலையில் தண்ணீர் பந்தலுக்காக அமைக்கப்பட்ட ஆஸ்பெட்டாஸ் கொட்டகையை அடித்து உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பனையப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story