குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட குழியை மூடக்கோரி மறியல்


குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட குழியை மூடக்கோரி மறியல்
x

குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட குழியை மூடக்கோரி மறியல் நடந்தது.

கரூர்

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு புதிய குழாய் பதிப்பதற்காக கரூர் மாவட்டம், தெலுங்குப்பட்டியில் உள்ள தோகைமலை-மணப்பாறை சாலையோரத்தில் குழி தோண்டி உள்ளனர். பின்னர் வேலை முடிந்தவுடன் அந்த குழியை அப்படியே விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி வழியாக சிலர் நடந்து செல்வதற்கு சிரமம் ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த சிலர் உடனடியாக தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும் என வலியுறுத்தி தெலுங்குப்பட்டியில் உள்ள தோகைமலை-மணப்பாறை சாலையில் டிராக்டரை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர்களான சேவியர் (வயது 48), ரோஸ், நித்தின் ஆகிய 3 பேர் மீதும் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story