அமராவதி ஆற்றங்கரையில் பன்றி வளர்ப்பு
அமராவதி ஆற்றங்கரையில் பன்றிகள் வளர்க்கப்படுவதால் நோய்கள் பரவும் அபாயம்
போடிப்பட்டி,
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமராவதி ஆற்றங்கரையில் பன்றிகள் வளர்க்கப்படுவதால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பன்றி வளர்ப்பு
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பைப் போல மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருசிலர் பன்றிகள் வளர்ப்பதை தொழிலாக செய்து வருகின்றனர். பன்றிகள் அதிக எண்ணிக்கையில் குட்டிகள் போடும் தன்மை கொண்டவை என்பதாலும், இறைச்சிக்காக அவற்றின் தேவை அதிக அளவில் உள்ளதாலும், அவற்றை விற்பனை செய்வதன் மூலம் அதிக வருவாய் எட்ட முடிகிறது என்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.பன்றி வளர்ப்பைப்பொறுத்தவரை சுகாதாரமற்ற நிலையில் உள்ள நீர் நிலைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. அந்தவகையில் மடத்துக்குளம், குமரலிங்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் அமராவதி ஆற்றின் கரைகளில் கழிவுகள் தேங்கி சுகாதாரமற்ற நிலை காணப்படுகிறது.மேலும் ஆகாயத்தாமரைகள் படர்ந்ததுடன், சேறும் சகதியுமாகவும் மாறியுள்ளது. இதில் மடத்துக்குளம் பகுதியில் அமராவதி ஆற்றின் மறுகரையில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன.
நோய் பரவும் அபாயம்
ராஜவாய்க்கால் பகுதியில் கழிவுநீர் கலக்கப்படுவதால் சாக்கடைக்கால்வாய் போல மாறியுள்ளது. இந்த பகுதியை ஒட்டி வளர்க்கப்படும் பன்றிகள் ராஜவாய்க்கால் மற்றும் அமராவதி ஆற்றில் இறங்கி, உருண்டு புரண்டு உற்சாகக் குளியல் போடுகின்றன. மேலும் அந்த பகுதியிலேயே இயற்கை உபாதைகளை கழிகின்றன. இதனால் ஆற்றுநீர் மாசுபடுவதுடன் பல்வேறு நோய்கள் பரவவும் காரணமாகி விடுகிறது.அமராவதி ஆறு கரூர் பகுதி வரை பயணம் செய்து காவிரி ஆற்றில் கலக்கிறது. அதற்கிடையில் அமராவதி ஆற்று நீரின் மூலம் பல குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.பொதுமக்கள் குடிப்பதற்கு மட்டுமல்லாமல் கால்நடைகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்கும் அமராவதி ஆறு பெருமளவு கைகொடுத்து வருகிறது. இந்த நிலையில் கழிவுநீர் மட்டுமல்லாமல், பன்றிகளின் கழிவுகளும் கலப்பதால் நீர் அசுத்தமாகி பொதுமக்களும், கால்நடைகளும் நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே அமராவதி ஆற்றங்கரையில் பன்றிகள் வளர்ப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.