குவிந்து கிடக்கும் நெல்மணிகள்


குவிந்து கிடக்கும் நெல்மணிகள்
x

தஞ்சை அருகே திட்டையில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் குவியல், குவியலாக நெல்மணிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் இரவு, பகலாக காத்துக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சை அருகே திட்டையில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் குவியல், குவியலாக நெல்மணிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் இரவு, பகலாக காத்துக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

குறுவை சாகுபடி

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஜூன் 12-ந்தேதி அணை திறக்கப்பட்டது. இதையடுத்து குறுவை சாகுபடி அதிக அளவில் நடைபெற்றது. இந்த நிலையில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன.

இதில் முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் திறந்து கொள்முதல் செய்து வருகிறது. தஞ்சையை அடுத்த திட்டை கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பம்புசெட் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

கொள்முதல் நிலையங்கள்

அறுவை செய்யப்பட்ட நெல்மணிகளை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் திட்டையில் உள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து குவியல், குவியலாக கொட்டி வைத்துள்ளனர். ஆனால், கொள்முதல் நிலையத்தில் இருந்த மின் இணைப்புக்கு பணம் செலுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாகம் தவறியதால் மின்சாரத்தை துண்டித்து மீட்டரை எடுத்து சென்றுவிட்டனர். இதனால் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை அங்கு குவித்து வைத்துள்ளனர். இதற்கிடையில் மழை அவ்வப்போது பெய்து வருவதால், கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல்மணிகள் அனைத்தும் மழையால் சேதமடைந்து வருவதாகவும், கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்த நெல்லை, வேறு வழியின்றி தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இரவு, பகலாக காத்துக்கிடக்கும் நிலை

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், திட்டையில் நிரந்தரமாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு கடந்த சம்பா பருவம் வரை விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதையடுத்து முன்பட்ட குறுவை அறுவடை செய்த விவசாயிகள் பலரும் தங்களது நெல்லை திட்டையில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கொட்டி வைத்துள்ளோம். இது குறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினால் இன்று திறக்கிறோம், நாளை திறக்கிறோம் என்று சாக்குபோக்கு சொல்லி காலம் தாழ்த்தி வருகின்றனர்.

கொள்முதல் நிலையத்தில் நெல்லில் இருந்து தூசிகளை நீக்க எந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் மின்வாரிய அதிகாரிகள், கடந்த வாரம் மின்வாரியத்துக்கு மின் கட்டண தொகையை செலுத்த வில்லை எனக்கூறி மின்சாரத்தை துண்டித்து வயர்களை சுருட்டி வைத்துவிட்டு, மின் மீட்டரை எடுத்துச் சென்று விட்டனர். அதன் பிறகு விவசாயிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ரூ.15 ஆயிரம் ரூபாயை வசூலித்து மின்வாரியத்துக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்காக விவசாயிகளே முன்வந்து செலுத்தியுள்ளோம். இருப்பினும் மின் இணைப்பு இன்னும் கொடுக்கப்படவில்லை. கொள்முதல் நிலையமும் திறக்கப்படவில்லை.

விவசாயிகள் 2 ஆயிரம் மூட்டை நெல்லை கொண்டு வந்து கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்து இரவு பகலாக காத்திருக்கிறோம். தற்போது மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் நெல் மணிகள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்த நெல்லை, குறைவான விலை கிடைத்தாலும் பரவாயில்லை எனக்கூறி தனியார் நெல் வியாபாரிகளிடம் விவசாயிகள் நெல்லை விற்று வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மின் இணைப்பை வழங்கி கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


Next Story