நெல்லையப்பர் கோவிலில் பிள்ளையார் திருவிழா கொடியேற்றம்
நெல்லையப்பர் கோவிலில் பிள்ளையார் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பாண்டிய கால சிவாலயங்களில் பழமைவாய்ந்தது நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலாகும். இந்த கோவிலில் அனைத்து மாதங்களிலும் திருவிழா நடைபெறும். சித்திரை மாதம் பஞ்சாங்கம் வாசிக்கும் திருவிழா, வைகாசி விசாகம், ஐப்பசி திருக்கல்யாணம், ஆடிப்பூரம், ஆவணிமூலம், ஆனித்தேரோட்டம் ஆகிய திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் ஆனி மாதம் நடைபெறும் தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
நெல்லையப்பர் கோவிலில் பிள்ளையார் தேர், முருகர் தேர், நெல்லையப்பர் தேர், காந்திமதி அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என 5 தேர் ஒரே நாளில் ஓடுவது சிறப்பு வாய்ந்ததாகும். நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற ஜூலை 2-ந் தேதி சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.
நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா நடப்பதற்கு முன்பாக, பிள்ளையார் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி பிள்ளையார் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 8 மணிக்கு சுவாமி சன்னதியில் உள்ள சிறிய கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இரவில் பிள்ளையார் மூஞ்சுறு வாகனத்தில் உள்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி சன்னதி முன்பு உள்ள பெரிய விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும், இரவில் பிள்ளையார் மூஞ்சுறு வாகனத்தில் உள்வீதி உலா வருதலும் நடக்கிறது. வருகிற 11-ந் தேதி முதல் மூவர் திருவிழாவும், 16-ந் தேதி முதல் சந்திரசேகர்-பவானி அம்பாள் உற்சவமும் நடைபெறும். இதைத்தொடர்ந்து ஆனி பெருந்திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.